ஐசிசி டி20 போட்டியில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு: பிரச்சினையை தீர்க்க தமிம் இக்பால் வேண்டுகோள்
கிரிக்கெட் விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையை தீர்க்க வங்கதேச வாரியம் முன்வர வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. தாக்குதல் சம்பவத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில்தான் வங்கதேச அணி விளையாட வேண்டும். இல்லையென்றால் அந்த அணி புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையை தீர்க்க வங்கதேச வாரியம் முன்வர வேண்டும் என்று வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வேண்டுகோள் விடுத்தார்.
டாக்காவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஐபிஎல் கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை பேசித் தீர்க்கலாம். வங்கதேச நாட்டில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். புதிது புதிதாக கிரிக்கெட் வீரர்கள் உருவாகி வருகின்றனர். கிரிக்கெட்டில் வங்கதேசம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
இது ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதால் நான் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தேன். இந்தப் பிரச்சினையை வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.