"முதலில் அவரது அப்பாவிற்கு மரியாதை கொடுக்கச் சொல்லுங்கள்" - அன்புமணியை சாடிய தயாநிதி மாறன்!

"முதலில் அவரது அப்பாவிற்கு மரியாதை கொடுக்கச் சொல்லுங்கள்" - அன்புமணியை சாடிய தயாநிதி மாறன்!

அன்புமணியை முதலில் தனது அப்பாவிற்கு மரியாதை கொடுக்கச் சொல்லுங்கள் என எம்.பி தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் துவக்க விழா நடைபெற்றது. துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 5-வது மண்டலம் 14-வது பகுதி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 4.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உகந்த முறையில் அழகுப்படுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “துறைமுகம் தொகுதியில் இன்று மட்டும் 10 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். சென்னை மாநகராட்சி மண்டலம் 5-க்குட்பட்ட வார்டு 54, 55, 56,57 ,59 மற்றும் 60 -ல் மின்மாற்றிகளை அழகுப்படுத்தும் வகையில் வியூ கட்டர் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல் சிவானந்தா சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதியை 4 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்றார்.

எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பான கேள்விக்கு, “மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார், அதற்காகத் தான் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார். மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, ”வளர்ந்து வரும் மாநிலங்களில் இந்தியாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு, குறிப்பாக ஆக்ராவில் மக்கள் குறைவாக இருக்கிறார்கள். அங்கு மெட்ரோ பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற வகையில் பிரதமர் மோடி இங்கு வருகிறார்.

பொதுவாக பிரதமர் வருகிறார் என்றால், நல்ல அறிவிப்பு வரும் என்று சொல்வார்கள். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டின் வருகையால் நல்ல அறிவிப்பு வருவதில்லை, தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்பு தான் வருகிறது” என்றார்.

மேலும் நயினார் நாகேந்திரன் குறித்து தயாநிதி மாறன் பேசுகையில், “நயினார் நாகேந்திரன் பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார்.

பாஜக ஆளுகிற மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் குறித்து பேச வேண்டியது தானே? டெல்லியில் அச்சப்படும் அளவுக்கு அதிகமான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. பொதுவாக குறை சொல்ல வேண்டும், தேர்தல் நேரத்தில் தங்களை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்” என்றார்.

அன்புமணி தொடர்ச்சியாக திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார் அது குறித்து கேட்ட போது, “அன்புமணியை முதலில் அவங்க அப்பாவை பார்க்க சொல்லுங்கள், அப்பாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள். அவமானமாக இல்லையா?” என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.