பெண்கள் குறித்த அவதூறு பேச்சு: சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை

பெண்கள் குறித்த அவதூறு பேச்சு: சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், தற்போதைய அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்த மகளிர் ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சி.வி.சண்முகம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் நவம்பர் 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் அளித்த இருவரது பெயர்களை தவிர வேறு எந்த விவரங்களும், ஆதாரங்களும் இல்லை. ஓராண்டுக்கு மேல் சென்னையில் எந்த கூட்டத்திலும் சி.வி. சண்முகம் பங்கேற்று பேசாத நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது எப்படி?" என வாதிட்டனர்.

மேலும், "எந்த கூட்டத்திலும் சி.வி. சண்முகம் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை. அக்டோபர் 28 ம் தேதி ஆஜராகுமாறு அனுப்பிய சம்மன், அதற்கு முந்தைய நாள் தான் கையில் கிடைத்தது. அதே போல, வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட, மகளிர் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதால் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், "மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து விட்டதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இது சம்பந்தமான விவரங்களை பெற்று சரி பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மேற்குறிப்பிட்ட மனு குறித்து விளக்கமளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதே போல, மகளிர் ஆணைய உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.