'ஆளுநர் மாளிகையை முதல்வர் இல்லமாக மாற்ற வேண்டும்' - மல்லை சத்யா

'ஆளுநர் மாளிகையை முதல்வர் இல்லமாக மாற்ற வேண்டும்' - மல்லை சத்யா

ஆளுநர் மாளிகையை முதல்வர் இல்லமாக மாற்ற வேண்டும் என்று திராவிட வெற்றி கழகம் தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் திராவிட வெற்றி கழகம் தலைவர் மல்லை சத்யா கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஆளுநர் மாளிகையை முதல்வர் இல்லமாக மாற்ற வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கையாகும். மக்கள் மாளிகை என பெயர் மாற்றுவதால் ஒன்றும் நடந்து விடாது. ஆளுநருக்கு பதிலாக அங்கு முதல்வர் வாசம் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. கவர்னர்களே தேவையில்லாத நிறுவனம் என்பது தான் எங்கள் எண்ணம்

திமுக பொற்கால ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது என்பதில் நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் அதே ஆட்சி வர வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நோக்கம். தவெகவை பாஜக சிபிஐ மூலம் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம். ஜனநாயக அனுபவம் பெற வேண்டியது அவர்களின் கடமை.

தவெக தலைவர் விஜய்யின் பேச்சு மற்றும் சிபிஐ வழக்கு தொடர்பாக, அரசியல் எதிர்மறைகளை தவிர்க்கும் முயற்சியாக இருக்கலாம். செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என எதிர்பார்த்தது தவறாகி விட்டது. மீண்டும் நிலைமை திரும்பலாம்.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக போட்டியிடுவோம். அதிமுக கூட்டணியில் மதிமுக இணையுமா? என கேட்கிறீர்கள். மதிமுக எப்போதும் மதில் மேல் பூனை போல இருக்கும். அவர்கள் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைப்பாடு நிச்சயம் மாறும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை தமிழர் ரத்தக்கறை காங்கிரஸ் மீது படிந்துள்ளது என வைகோ கூறியுள்ளார். அது உண்மை என நம்பினால் காங்கிரஸ் தொகுதியில் நின்று வென்ற மதிமுக எப்படி பரிசுத்தமானது? அவர்கள் தங்கள் குற்றமில்லாத தன்மையை நிரூபிக்க நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்து தனித்து நிற்க தயாரா?

பாஜக கூட்டணி கணக்கு தமிழகத்தில் பொருந்தாது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடையாது. இன்று தமிழகத்தில் பொற்கால ஆட்சி கொடுப்பவர் எங்கள் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் தான். மக்களை மாயமாக்கும் சக்தி யாருக்கும் இல்லை. மக்கள் திமுகவை நம்புகிறார்கள். தேர்தலில் தங்களுக்கான பேரம் உயர வேண்டும் என்பதற்காகவே வைகோ நடைபயணத்தை தொடங்கியுள்ளார் '' என்றார்.