'SIR' விவகாரம்: முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்... தவெக புறக்கணிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக இன்று திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக, நாதக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 'SIR' எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். குறிப்பாக இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள், பெண்கள் உள்ளிட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து, அனைத்து கட்சி கூட்டத்திற்கு வருமாறு திமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது, பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் சூழலில், ராமதாஸ் தரப்புக்கு மட்டும் திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்தன.