சென்னைக்கு இனி மழையால் ஆபத்து கிடையாது: அடித்து சொன்ன மா. சுப்பிரமணியன்

சென்னைக்கு இனி மழையால் ஆபத்து கிடையாது: அடித்து சொன்ன மா. சுப்பிரமணியன்

சென்னையில் 3,047 கி.மீட்டருக்கு மழைநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவ மழையால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10, 11 மற்றும் 13 மண்டலங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய துறைகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் குடிநீர், நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், “சென்னைக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட 6 ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. அவற்றில் 10,200 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கும் போது கவனமாக கண்காணிக்க வேண்டி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் கடலில் இணையும் பகுதியையும் கண்காணிக்க வேண்டியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் அடையாற்றை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இன்று பகல் 2 மணி வரை 26.78 செ.மீ. மழை பெய்துள்ளது. இது அதிகபட்ச மழைப்பொழிவு எனலாம். முன்பெல்லாம் 5 செ.மீ. மழை பெய்தாலே சுரங்கங்களில் தண்ணீர் தேங்கும். ஆனால் இப்போது அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை, போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லை.

பொதுவாக, சென்னையை பொறுத்தவரையில் 86 செ.மீ. வரை வட கிழக்கு பருவ மழை இருக்கும். அதன்படி, இன்னும் 60 செ.மீ. மழை வர வேண்டியது இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி 13,220 மில்லியன் கன அடி கொண்டது. தற்போது 10,000 மில்லியன் கன அடி நீர் அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு 100 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போது 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக எண்ணூரில் 14.67 செ.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக, மௌலிவாக்கம் பகுதியில் 8.80 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 3,047 கி.மீ. மழைநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 331 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ளது. எனவே, சென்னைக்கு இனி மழையால் ஆபத்து இருக்காது” என்றார்.