'ரிமோட்' தமிழ்நாட்டிடம் தான் இருக்க வேண்டும் - விட்டு விடுவோமா? என கமலஹாசன் பேச்சு

'ரிமோட்' தமிழ்நாட்டிடம் தான் இருக்க வேண்டும் - விட்டு விடுவோமா? என கமலஹாசன் பேச்சு

திமுக-வை எதிர்த்து ரிமோட்டை ஏன் தூக்கி எறிந்தேன் என்பதற்கான விளக்கத்தை கமல்ஹாசன் அளித்துள்ளார்.

தஞ்சாவூரை அடுத்த செங்கிப்பட்டி புதுக்கரியப்பட்டி கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் சினேகனின் தந்தை ம.சிவசங்குவின் உருவப்பட திறப்பு விழா இன்று (நவ 18) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சி கொள்கை விளக்கம் சரியாக சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். நற்றமிழில் சொல்லிவிட்டோம், எங்களது கொள்கை விளக்கம் செயல் வடிவமாக மாறி இருக்கிறது. எங்களது கொள்கை எல்லாம் தேர்தலில் தோற்றாலும், செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. இனி தான் ஆற்றலை காட்ட வேண்டிய நேரம்.

பதவி வரும் போது பணிவு வர வேண்டும். அதே நேரம் துணிவும் வர வேண்டும் தோழா... பதவிக்காக துணிவை இழக்கும் மரியாதை அற்ற மக்கள் அல்ல தமிழர்கள். ஒன்றை நிராகரிப்பது அல்ல பகுத்தறிவு. ஒன்றை புரிந்து கொண்டு தேவையான அளவு அதில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்வது தான் பகுத்தறிவு.

முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், தொண்டு செய்ய பழகிக் கொண்டு பிறகு அரசியலில் வந்து மூத்தவர்களிடம், மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்று கருத்துக்கள் இருந்தே ஆக வேண்டும். அதன் பெயர் தான் ஜனநாயகம்,

ஆனால் நாடு என்று வரும் போது, நாம் கூடி நின்றாக வேண்டும். எதற்காக திமுக கூட்டணியில் சேர்ந்தீர்கள்? ரிமோட்டை நீங்கள் தான் தூக்கிப் போட்டீர்களே? ஏன் மறுபடியும் திமுக கூட்டணிக்கு போனீர்கள்? என்றால்; ரிமோட்டை தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு.

ரிமோட்டை வேறு யாராவது தூக்கிட்டு ஓடிட்டா? அப்படி நடக்க விட மாட்டோம். ரிமோட் மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

ரிமோட்டை கொடுப்போமா? எடுத்துட்டு வா திருப்பி எனக் கேட்டு ஒளித்து வைத்துக் கொள்வோம். ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது ஒருத்தன் தூக்கிட்டு போயிடுவார் என்று நினைத்து எடுத்த முடிவு தான் இந்த கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்.

ஜனநாயகம் என்று வந்தால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது வேண்டாம் என்றால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம்” என்று தெரிவித்தார்.