2708 உதவி பேராசிரியர் பணியிடம் நிரந்தரப்படுத்தப்படும்! அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!

2708 உதவி பேராசிரியர் பணியிடம் நிரந்தரப்படுத்தப்படும்! அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடம் நிரந்தரப்படுத்தப்படும் என உயர் கல்வித் துறைஅமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உயர் கல்வியில் நமது மாணவர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில் நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்பதற்காக மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் நான் முதல்வன் என்ற முத்தான திட்டத்தை வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், உயர் கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சுய மரியாதையுடன் உயர் கல்வி பயிலவும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு மட்டும் 16 புதிய கல்லூரிகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதனை தொடங்கி வைத்துள்ளோம். மேலும், இந்த 15 புதிய கல்லூரிகளில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவ, மாணவிகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி பாடத் திட்டத்தில் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்பவும் பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்" என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.