முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். 538 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து 44,924 பயனாளிகளுக்கும் மொத்தம் 100 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.67.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம் மற்றும் புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவிற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம், அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். இதன் பின்னர் விழா குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "தமிழக முதல்வர் வரும் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 20 ஆம் தேதி மதியம் நெல்லைக்கு வரும் முதல்வருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதனையடுத்து பாளையங்கோட்டை டக்ரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார்.

மறுநாள் 21 ஆம் தேதி காலை பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். தொடர்ந்து 200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து 538.48 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து அரசு விழாவில் 44,924 பயனாளிகளுக்கு 100 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்," என்றார்.

மேலும், "50க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்விலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் அளிக்க உள்ளார். விழாவில் 25,000 பேர் பங்கேற்கும் வகையில் மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது

மாநகர பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்கான நிதி முதலமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் சாலைகள் அமைக்கப்படும். மழை காலம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் நெல்லை மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வீட்டு இணைப்பு கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக சாலைகள் புதிதாக அமைக்கப்படாமல் பேட்ச் ஒர்க் நடந்து வருகிறது" என்று கே.என்.நேரு கூறினார்.