எம்எல்ஏ கார் மோதி முதியவர் பலி - போலீசார் தீவிர விசாரணை

எம்எல்ஏ கார் மோதி முதியவர் பலி - போலீசார் தீவிர விசாரணை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேசட்டமன்ற உறுப்பினரின் கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.

ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 50 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர் தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோவிந்தராஜ் இன்று விவசாய வேலை காரணமாக வயலுக்கு தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டப் பேரவை உறுப்பினருமான துரை சந்திரசேகரின் கார் கோவிந்தராஜின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விவசாயி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரத்தநாடு காவல் துறையினர், விவசாயி கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ஒரத்தநாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டப் பேரவை உறுப்பினர் கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.