உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

சுதேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன்படி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘அலுவலக பயன்பாட்டுக்காக உள்நாட்டு மென்பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறிவிட்டேன்’’ என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியையும் அவர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்.
அடுத்த கட்டமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பயண வழிகாட்டி செயலியான மேப்பில்ஸை அவர் பயன்படுத்த தொடங்கி உள்ளார். இந்த செயலியை இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அவர் காரில் பயணம் மேற்கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மேப் மை இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ், ராஷ்மி தம்பதியர் இந்தியாவுக்கு திரும்பி சிஇ இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இந்த நிறுவனம் மேப் மை இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.நாடு முழுவதும் சிறிய தெருவைகூட விடாமல் ஆய்வு செய்து டிஜிட்டல் வரைபடத்தை ராகேஷ், ராஷ்மி தம்பதியர் உருவாக்கினர்.