இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

“எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி. எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது. எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்துள்ளோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. அந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, “தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் வாழ்த்துகள். திறமையான இளைஞர்களை அடையாளம் காண உழைக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். 4 ஆண்டுகளில் தமிழகம் எப்படிப்பட்ட உயரங்களை அடைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.
அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் விளையாட்டுத் துறை உட்கட்டமைப்புக்கு ரூ.170.31 கோடி ஒதுக்கினார்கள். கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விளையாட்டுத் துறைக்கு மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அதனால் தான் தமிழ்நாடு விளையாட்டு துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். இளைஞர்களின் நலனையும், விளையாட்டுத் துறையையும் 'The Young and Energetic Minister'-யிடம் ஒப்படைத்தால் அது எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
தேசிய, பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 5,393 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் போல் வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைப்பதில்லை.
எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி. எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது. உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம். விளையாட்டில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தாருங்கள்” என்றார்.