டிட்வா புயலால் நீரில் மூழ்கிய 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

டிட்வா புயலால் நீரில் மூழ்கிய 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

டிட்வா புயல் காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்புதான் நடவு பணிகள் முடிந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது.

இதனால் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான இளம் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வடிகால், வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால் அழுகிவிடும் என்பதால் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீரில் மிதக்கும் எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமம்

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாய் நாற்றாங்கால் (நவீன விவசாய முறை) முறையில் வளர்க்கப்பட்ட சம்பா பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், தற்போது இரண்டாவது முறை நடவு செய்துள்ள நிலையில் அந்த பயிரும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தூர்வாரப்படாத வடிகால்கள்

திருக்கடையூர், கீழையூர் பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரைகள், கோரைகள் மண்டியுள்ளன. இதனால் வெள்ள நீரை வடியவைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்ற வேண்டுமெனவும், வடிகால்களை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை வழங்குவதுடன் விவசாயிகளின் வங்கிக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.