தூத்துக்குடி டூ சென்னை: பறக்க நினைத்த மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியர்

தூத்துக்குடி டூ சென்னை: பறக்க நினைத்த மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியர்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 17 பேரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி பகுதியில் நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் பணிபுரிந்து வருகிறார்.

நல்லாசிரியர் விருது பெற்ற இவர், ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியை டிஜிட்டல்மயமாக்கி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்ல, தனது சொந்த செலவில் பல்வேறு புதிய கட்டடங்களையும் கட்டி மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ, மாணவிகள், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆறு பேர் என 17 பேரின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

பின்னர், அவர்கள் அனைவரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்றனர். சென்னையில் அவர்கள், கன்னிமாரா நூலகம், அருங்காட்சியகம், தலைமைச் செயலகம், தலைவர்களின் சமாதிகள் ஆகியவற்றை பார்ப்பதுடன், மெட்ரோ ரயிலிலும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.