சென்னையில் சாக்கு மூட்டையில் பிணம் - பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அடையாறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் நேற்று காலை சாலையோரமாக சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தமும் வழிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூட்டையை திறந்து பார்த்த போது 35 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் கொல்லப்பட்ட இளைஞரின் தலையில் மூன்று வெட்டு காயங்களும், சிறு ரத்த காயங்களும் இருந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் பைக்கில் வந்து இந்த சாக்கு மூட்டையை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள அந்த பைக்கின் பதிவு எண்ணை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இறந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார்(30) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வட மாநிலத்தவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்து முக்கிய சாலையில் வீசி சென்றார்கள் என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு 6 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகள் பிடிபட்ட பிறகு இந்த கொலையின் பின்னணி குறித்து தெரியவரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.