தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர் மாஃபா?
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மாஃபா பாண்டியராஜன் மும்பைக்கு சென்றதால், அவர் தவெகவில் இணையக்கூடும் என தகவல் பரவி வருகிறது.
சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால், பெரும் பரப்பரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், கொள்கை பரப்பு மாநில இணைச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வராதது பெரும் பேசுபொருளாகி உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்காத மாஃபா
முன்னதாக, அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அணிகளாக பிரிந்துள்ளதால், கட்சியை ஒன்றினைக்க வேண்டும் என கூறிய செங்கோட்டையன், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்த பிறகு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, செங்கோட்டையன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க-வில் இணைந்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வில் இன்னும் பலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மாஃபா பாண்டியராஜன் தரப்பும் அதிருப்தியில் இருப்பதால் தான் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர் விரைவில் த.வெ.க-வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
மாஃபாவின் மும்பை பயணம்
தவெக-விற்கு மாஃபா பாண்டியராஜன் செல்ல உள்ளதாக தகவல் பரவுகிறதே என்ற கேள்விக்கு, மாஃபா பாண்டியராஜன் அவ்வளவு தாழ்ந்து போகமாட்டார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய இந்த கேள்விகளுக்கு விடையை தேடி, மாஃபா பாண்டியராஜன் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், தான் மும்பையில் ஒரு பணிக்காக வந்திருப்பதாகவும், தலைமைக்கு இந்த செய்தி தெரியும் எனவும், வேறு காரணங்கள் ஏதும் இல்லை. சென்னை வந்த பிறகு அவர்களை பார்பேன் என்றும் கூறினார்.
அ.தி.மு.க பொதுக்குழு-செயற்குழு கூட்டம்
இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் தற்காலிக அவைத் தலைவராக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல் நிலை சரியில்லாததால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமியை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.