சிபிஐ விசாரணை மூலம் தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்? சந்தேகம் எழுப்பும் கரூர் காங்கிரஸ் எம்.பி!

சிபிஐ விசாரணை மூலம் தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்? சந்தேகம் எழுப்பும் கரூர் காங்கிரஸ் எம்.பி!

சிபிஐ விசாரணை மூலம் தவெகவுக்கு நெருக்கடி அளிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் செய்ய வாய்ப்புள்ளதாக கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி திருச்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் சிக்கி 41 பேர் இறந்து போய் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ச்சியாக நான் சந்தித்து வருகிறேன். பல பேர் எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் தின கூலிகளாக இருக்கின்றனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதே மிகுந்த மனச்சுமையை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அதற்கான சரியான விசாரணை நடக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு.

உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அஸ்ரா கார்க் மிக முக்கியமான நேர்மையான ஆளுமை மிக்க அதிகாரி. தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு முன்னாள் நீதியரசர் சஞ்சய் ரஸ்தோக்கி அவர்களுடைய தலைமையில் குழுவையும் அமைத்துள்ளனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தபின் சிபிஐயாக இருந்தாலும், அமலாக்கத் துறையாக இருந்தாலும் வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. சிபிஐ விசாரணை மட்டும் வைத்தால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என்பதால், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

அந்தக் குழுவில் தமிழக கேடரை சேர்ந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறலாம் என்றும், ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக அல்லாதவர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அந்த குழுவில் ஒருவராக அஸ்ரா கார்க் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர்கள் கூறும் அனைத்து நடைமுறையும் அஸ்ரா கார்க்கிற்கு பொருந்தியுள்ளது. அந்தக் குழுவில் அஸ்ரா கார்க்கை சேர்த்தால் அந்த விசாரணை நேர்மையாக சரியான பாதையில் செல்கிறது என்ற புரிதலை நமக்கு அளிக்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு ஒரு சின்ன நெருடல் உள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்த விசாரணையை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் எங்கும் இல்லை. மாதம் ஒருமுறை சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. அப்படியெனில் இந்த வழக்கு விசாரணை முடிய ஒரு வருடம் ஆகுமா? இரண்டு வருடங்கள் ஆகுமா? அல்லது நான்கு வருடங்கள் ஆகுமா? என யாருக்கும் தெரியாது. இந்த வழக்கு முடிவடையாத ஒரு சூழல் உள்ளதால் தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்க வேண்டும்.

பாஜகவை பொறுத்தவரை அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. பாஜகவின் டிராக் ரெக்கார்டு அதுதான். பாஜகவின் கீழ் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியும் என நாம் நினைக்க முடியாது. தமிழக வெற்றிக் கழகமும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. இதுபோன்ற சூழலில் பாசிச சக்தியை தமிழக வெற்றிக் கழகம் எவ்வளவு தூரம் வலிமையாக எதிர்க்கிறது என்பதற்கான அரசியல் ரீதியான சவாலாக அவர்களுக்கு இது இருக்கும்" என்று ஜோதிமணி கூறினார்.