ஒரு டிரில்லியன் டாலர் கனவு புத்தக அறிமுக நிகழ்ச்சி... அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
"ஒரு டிரில்லியன் டாலர் கனவு" புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்று நூலை அறிமுகப்படுத்தினார்.
மூத்த செய்தியாளர் திருஞானம் எழுதிய "ஒரு டிரில்லியன் டாலர் கனவு" புத்தகத்தை அண்மையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை தியாகராயநகரில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளரும், நூலாசிரியருமான திருஞானம் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கனவு என்றால் என்ன. டாக்டர் கலாம் இதுகுறித்து பேசியுள்ளார். தூக்கத்தில் காண்பது அல்ல கனவு, உன்னைத் தூங்க விடாமல் செய்வதே கனவு என அவர் கூறியுள்ளார். இது எவ்வளவு ஆழ்ந்த வார்த்தை. கனவு என்பது இலக்கு. அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்க வேண்டும். மாநிலத்திற்கும் இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கும் இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்திற்கு ஒரு இலக்கு நிர்ணயித்து கொடுத்துள்ளார் நமது முதல்வர் அவர்கள். இது ஒரு டிரில்லியன் டாலர் என்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இதை மாணவர்களும், இளைஞர்களும் புரிந்து கொண்டால், தமிழகத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த நாடுகளில் 175 நாடுகள், ஒரு டிரில்லியன் டாலரை அடையவில்லை. ஆனால் பல மாநிலங்களை கொண்ட நமது நாட்டில் ஒரு மாநிலமான தமிழகத்திற்கு இலக்காக ஒரு டிரில்லியன் டாலரை நமது முதல்வர் நிர்ணயித்துள்ளார்.
அதாவது, தற்போது நமது மாநிலத்தின் ஜிடிபி 35 லட்சம் கோடி ஆகும். இதை 5 ஆண்டுகளில் 90 லட்சம் கோடியாக்க இலக்கு நிர்ணயித்துள்ளார். இது உண்மையில் சாத்தியமானதுதான்.
இந்த கனவு இலக்கு குறித்து அனைத்து ஊடங்களும் பேச வேண்டும். இந்த இலக்கினை அடைவதற்கு தடைகள் போடும் ஒன்றிய அரசை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்து நிற்க வேண்டும்.
அப்படி நடந்தால், இது சாத்தியமான இலக்குதான். "
இவ்வாறு நூல் ஆசிரியர் திருஞானம் பேசினார்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"ஒரு டிரில்லியன் டாலர் கனவு நூலை எழுதியுள்ள நூலாசிரியர் திரு திருஞானம், ஊடகவியாளர் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படிக்கையில், அவர் பொருளாதார பேராசிரியராக இருந்திருப்பாரோ என தோன்றுகிறது. ஏனெனில் பேராசிரியர், தமது மாணவருக்கு பொருளாதாரம் குறித்து எப்படி மிகவும் எளிமையாக சொல்லி புரிய வைப்பாரோ. அதேபோல் இந்த நூலில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
இந்த ஒரு டிரில்லியன் டாலர் கனவு என்பது குறித்து 2021ல் இருந்து நாம் பேச ஆரம்பித்தோம். அந்த ஆண்டில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, நமது முதல்வர் அவர்கள், இந்த இலக்கு குறித்து பேசினார். அப்போது இருந்து இந்த வார்த்தை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் நூலாசிரியர் இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
நமது துணை முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள வாழ்த்து செய்தியில், ஏற்கெனவே இதுபோன்ற புத்தகம் தேவை என தாம் நினைத்ததாகவும், அதை நூலாசிரியர் புத்தகமாக கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை நமது மாணவ சமுதாயம் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது தற்போது 35 லட்சம் கோடியாகும்.
இது இன்னும் 5 ஆண்டுகளில் 90 லட்சம் கோடியை தொட வேண்டும் என்பதுதான் முதல்வர் முன்வைத்துள்ள இலக்கு.
நமது முதல்வர் நமது மாநில மக்களின் நலனை மனதில் வைத்து கனவு இலக்கை முன்வைய்துள்ளார். அதை நிறைவேற்றும் நோக்கில் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறார்.
அதனால்தான் நமது பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் என்ற அளவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளது.
இதுகுறித்தும், நமது நாட்டின் ஜிடிபி குறித்தும் தெளிவாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிடிபி என்றால் என்ன என விளக்கமாக புரியும்படி கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து அதிக நிதி பெறும் மத்திய அரசு, நமது மாநிலத்திற்கு குறைந்த நிதியையே தருகிறது. இதுகுறித்து புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் திருஞானம் அவர்கள்.
மத்தியில் ஆளும் அவர்கள் (பாஜக) நமது மாநிலத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களின் திட்டம், தமிழகத்திற்கு எதிரானது ஆகும். இதற்கு துணை போய் விடக்கூடாது." இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் பேசும்போது, "எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடல், ஆனால் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்பது குஜராத் மாடல்" என்று வேறு படுத்திக்காட்டினார்.

இளம் தொழில் முனைவோர் சுரேஷ் சம்பந்தம் பேசும்போது, மருத்துவர்கள் விகிதாச்சாரத்தில் அமெரிக்காவை முந்திச் செல்கிறது தமிழ்நாடு மாடல் என்று விளக்கிப்பேசினார்.
திராவிடர் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மதிவதனி, ஊடகவியலாளர் தோழர் தேரடி இந்திரகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் மாணவர்கள், மற்றும் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
