பெருவில் நிலச்சரிவு: 2 படகுகள் மூழ்கியதில் 12 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் நிலச்சரிவு காரணமாக இரண்டு படகுகள் மூழ்கின. இதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர், பலர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த நாட்டில் பாயும் அமேசான் ஆற்று படுகையின் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் இதில் நீரில் மூழ்கின. இந்த சம்பவம் அங்குள்ள உகாயாலி பகுதியில் நடைபெற்றுள்ளது. இதை அந்நாட்டு காவல் துறை உறுதி செய்துள்ளதாக அமெரிக்காவில் செயல்படும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அதில் ஒரு படகில் சுமார் 50 பேர் இருந்ததாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆற்றில் பாயும் நீரின் வேகம் மற்றும் நீர் சுழற்சி காரணமாக மீட்பு பணி மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலம் என்பதாலும், சம்பவ இடத்தில் பனி மூட்டம் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.