“கூடுதல் தொகுதிகள் வேண்டும்; கூட்டணியில் சேதம் ஏற்பட்டால் அது திமுகவுக்கே பலவீனம்” - பெ.சண்முகம்

“கூடுதல் தொகுதிகள் வேண்டும்; கூட்டணியில் சேதம் ஏற்பட்டால் அது திமுகவுக்கே பலவீனம்” - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார் பெ.சண்முகம். அரசியல் கள நிகழ்வுகள், திமுகவுடனான கூட்டணி, தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் அளித்த பேட்டி.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற உங்கள் முன் உள்ள சவால்கள் எவை?

திமுக அல்லது அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சி என்ற எதிர்மறையான கருத்து பரவியிருப்பதால், மார்க்சிஸ்ட் கட்சியைத் தமிழகத்தில் பலமான கட்சியாக வளர்த்தெடுப்பது தான் முக்கியமான சவால்.

திமுக கொடுத்த, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து முதல்வரிடம் முறையிட்டுள்ளீர்களா?

பலமுறை முறையிட்டிருக்கிறேன். குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தேர்தலுக்கு முன்பாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதுதான் 2026 தேர்தலில் இந்தக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களுக்கு தொடர்ந்து போராடி வருகிறார்களே?

போக்குவரத்து ஊழியர்களுக்குத் தரவேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இவ்விவகாரத்தில் காலதாமதம் செய்வது ஊழியர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு முன்பு நிலுவைத் தொகை வழங்கப்படும் எனத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்; அதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகள், கஞ்சா, மது போதை அதிகரிப்பு போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கூட கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்க தயங்குவது ஏன்?

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை தாண்டி அரசை வற்புறுத்த வேறொன்றும் இல்லை. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் விவகாரத்தில் எவ்வித சமரசமும் இன்றி மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நீங்கள் இந்த முறை அதிக இடங்களை கேட்டுப் பெற அழுத்தம் கொடுப்பீர்களா? கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதி ஒதுக்க திமுக ஆலோசித்து வருவதாக பேச்சு நிலவுகிறதே?

கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை கூடுதலான இடங்கள் வேண்டும், சட்டப்பேரவைக்குள் எங்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதை திமுகவிடம் தெளிவுபடுத்திவிட்டோம். 15 முதல் 20 தொகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். திமுக கூட்டணியில், கூட்டணியின் ஒற்றுமை தான் அதன் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது. கூட்டணியில் சேதம் ஏற்பட்டால் அது திமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். எங்களைவிட, திமுகவுக்கு அது நன்றாக தெரியும். இதனால் அதற்கு ஒரு பாதகம் ஏற்படும் வகையில் திமுக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதால் திமுக தரும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிடுவதைத் தவிர கம்யூனிஸ்ட்களுக்கு வேறு வழியில்லை என்ற கருத்தை ஒப்புக்கொள்வீர்களா?

பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக, அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் தான் திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அதற்கேற்ப அதிமுக - பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பதுதான் பிரதான நோக்கம். இது வேறு வழியில்லாமல் அல்ல.

கரூர் வழக்கை சிபிஐ விசாரிப்பதால் இந்த வழக்கை வைத்து விஜய்யை பாஜக தனது பிடிக்குள் கொண்டுவந்துவிடும் என்ற கருத்து பரவி வருகிறதே?

தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக - பாஜக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதனடிப்படையில் நீதிமன்றத்தில் பாஜக தனது செல்வாக்கை பயன்படுத்தி சிபிஐ விசாரணையை பெற்றிருப்பதாகவே சந்தேகம் எழுகிறது. அதற்கேற்ப அதிமுக கூட்டத்திலும் தவெக கொடிகள் பறக்கின்றன. இதன்மூலம் அதிமுக - தவெக கூட்டணி ஏற்படும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் சேர்ந்தால் திமுக கூட்டணிக்கு வரும் வாக்குகளை பாதிக்குமா?

பாஜக கொள்கை எதிரி என சொன்னவர் விஜய். அதை மீறி அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சமரசம் செய்துகொண்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். அது அவருக்கு எதிர்மறையாகச் செல்லுமே தவிர சாதகமாகச் செல்ல வாய்ப்பில்லை.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான அணி வரவேண்டும் என்ற கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

மக்கள் நலக் கூட்டணி அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான். அவ்வப்போது இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.

திமுக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என்கிறாரே நயினார் நாகேந்திரன்?

அது அவரது ஆசை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழல் தமிழகத்தில் இல்லை.

தொழில் முதலீட்டை ஈர்க்கும் விவகாரத்தில் அதிமுக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு தர மறுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

முதலீடுகள், ஒப்பந்தங்கள், சலுகைகள், வேலைவாய்ப்புகள் குறித்து அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தான் அரசு செயல்படுகிறது என்றால் அதை வெளியில் சொல்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும்.

தெரு பெயர்களில் சாதி பெயரை நீக்கும் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

சாதிப் பெயரை முழுமையாக நீக்க வேண்டும் என்கிற தன்மையில் வெளியிடப்பட்ட அரசாணை அல்ல. உள்ளூர் மட்டத்தில் நீக்கத் தீர்மானிக்கலாம். இதில் ஒரு போதாமை இருப்பதாகவே தான் பார்க்கிறேன்.