கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: டாஸ்மாக் பாரை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: டாஸ்மாக் பாரை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்!

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த சட்ட விரோத மதுபானக் கூடத்தை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர்.

கோயம்புத்தூர் விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பின்புறம், நேற்று இரவு இளம் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் படுகாயமடைந்த இளம் பெண்ணுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், சாலைவசதி, தெருவிளக்கு வசதிகள் இல்லாததாலும், அங்கு பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள புதர்களை மது அருந்தும் இடமாகவும், கஞ்சா, போதைப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் இடமாகவும் பலர் பயன்படுத்தி வந்துள்ளனர். போலீசாரின் வருகைக் குறைவு என்பதால் இப்பகுதியில் இரவு வேளைகளில் தனியாக செல்ல, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அஞ்சும் நிலை நிலவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்டது. இதனையடுத்து, அந்த கடையை ஒட்டியிருந்த மதுபான கூடத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மதுபான கூடத்தை மூடாமல் வைத்திருந்ததோடு, வெளியில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த சட்ட விரோத மதுபானக் கூடத்திற்கு வந்த யாரேனும் இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று மாலை அந்த மதுபான கூடத்திற்கு வந்த சிங்காநல்லூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அங்கு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அந்த மதுபான கூடத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், சட்ட விரோத மதுபான கூடத்தில் விற்பனை செய்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவரை ஒப்படைத்தனர். அவரிடம், இந்த மதுபான கூடத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சிங்கநல்லூர் தொகுதி நிர்வாகி நேரு கூறும் போது, “3 பேர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு பக்கத்திலேயே இந்த சட்ட விரோத பார் இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டில் இங்கு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கிய போது, வழிப்பறி முயற்சியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விமான நிலையம் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதி.

பிரதமர், முதலமைச்சர் என யார் வந்தாலும், விமான நிலையம் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு கிடைக்காதது ஏன்? இந்த இடம் இவ்வளவு மோசமாக உள்ளது கோயம்புத்தூருக்கு பெரிய அவமானம். இங்கு விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசில் ஒப்படைத்துள்ளோம்” என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.