தொடங்கியது 3ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்! இன்று 7 மசோதாக்கள் தாக்கல்! - 3RD DAY ASSEMBLY SESSION
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடரான இன்று 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
ஆறு மாதங்களுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையானது கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு நடுவே தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இரண்டாம் நாளில் 2025-26ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், நேற்று நேரமில்லா நேரத்தில் கரூர் சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். அவருடைய விளக்கத்தைத் தொடர்ந்து நள்ளிரவில் 31 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும் மாறி மாறி விளக்கமளித்த நிலையில், ஒரு கட்டத்தில் பேரவையில் அமளி ஏற்பட்டது.
அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.