கோவையில் காரோடு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

கோவையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஒட்டுநர் காரோடு இழுத்து செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அந்த நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல ஏராளமான சரக்கு வாகனங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வசந்தாமில் அருகே நேற்று சுடலைமுத்து என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோவை திருப்பும் போது, அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசி உள்ளது. மது போதையில் காரில் வந்த இளைஞர்கள் முத்துவிடம் சண்டையிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காரில் வந்தவர்களை ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து தாக்கினார். பதிலுக்கு அவர்களும் ஆட்டோ ஒட்டுநரை தாக்கி உள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் காரை எடுக்க விடாமல் ஆட்டோ ஓட்டுநர் காரின் முன்பு நின்று தடுத்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காரை இயக்கியதில் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது தூரம் ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்து சென்றனர்.
சிறிது தூரம் தொங்கியபடி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து பின்னர் காரில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காரில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநரை சாலையில் இழுத்துச் செல்லும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரில் வந்த இளைஞர்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.