மாரடைப்பால் உயிரிழந்த சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி! இரங்கல் தெரிவித்த முதல்வர்
சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் திமுக உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் பொன்னுசாமி. இவர் நேற்று வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று இரவு உறங்கிய நிலையில், இன்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேற்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடலுக்கு எம்.பி ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.ளின் அஞ்சலிக்காக சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரது மறைவு திமுகவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னுசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவிலிருந்து இணைந்தார். தொடர்ந்து 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 2011, 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார். தற்போது கொல்லிமலை பகுதியில் வசித்து வரும் இவர், சோளக்காட்டில் பழக்கடையும் நடத்தி வந்தார். இவர் மிக எளிமையான மனிதராகவும் மக்கள் எளிதில் அணுக கூடிய மனிதராகவும் திகழ்ந்தார்.
பொன்னுசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மக்கள் பணியாற்றிவந்த பொன்னுசாமியின் மறைவு அங்குள்ள மக்களுக்கும் திமுகவிற்கும் பேரிழப்பாகும் என்றும், கழகத்தின் மீதும், கலைஞர் மீதும் பேரன்பு கொண்டிருந்த அவர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.