50 மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி - பொள்ளாச்சியில் நெகிழ்ச்சி!

50 மணி நேரம், 50 நிமிடம், 50 நொடி ஒற்றைக் கொம்பு சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 50 ஆவது பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், மாபெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 50 மணி நேரம், 50 நிமிடம், 50 நொடி நடைபெறும் இந்த சாதனை முயற்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று (அக்.09) தொடங்கிய இந்த சாதனை முயற்சி, 50 மணி நேரம், 50 நிமிடம் 50 நொடி என இன்று முழுவதும் நடைபெற்று நாளை (அக்.11) மாலை முடிவடைகிறது. இதில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என 122 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சி, சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (Cholan Book of World Records) புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இதற்காக, அந்த அமைப்பிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு, இந்த சிலம்பம் சாதனை முயற்சியை கண்காணித்து வருகின்றனர். இந்த முயற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர்.
வளரும் இளம் தலைமுறையினருக்கும், மாணவர்களுக்கும் சிலம்பம் தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தனி மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் இந்த சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிலம்பம் பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன் கூறுகையில், “பள்ளி பொன்விழா ஆண்டையொட்டி, தொடர்ச்சியாக 50 மணி நேரம், 50 நிமிடம், 50 நொடி ஒற்றைக்கொம்பு சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சியை தற்போது நடைபெற்று வருகிறது.
இளம் தலைமுறையினர் தொலைபேசியில் நேரம் செலவிடுவதை தவிர்த்து, தற்காப்பு கலைகளை மீட்டெடுக்க இந்த உலக சாதனை நிகழ்ச்சியை முன்னெடுத்தி நடத்தி வருகிறோம். இதனை சோழன் சாதனை புத்தக நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாணவர்களுக்கு வழங்குவர்” என தெரிவித்தார்.