போலீஸ் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு: காட்பாடியில் சிக்கிய ஒடிசா தம்பதி

போலீஸ் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு: காட்பாடியில் சிக்கிய ஒடிசா தம்பதி

புதுக்கோட்டையில் காவலர் ஒருவர் வீட்டில் 40 பவுன் நகையை திருடிச் சென்ற தம்பதியை, காட்பாடி ரயில்வே போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மொத்த நகைகளும் மீட்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம் (ஜன.29), இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். கணவர் கலைராஜனும் தனது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த கலைராஜனின் தாயார் தமிழ்ச்செல்வி, துணிகளை துவைப்பதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்து பாரத்த போது, தாழிடப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, வீட்டுக்குள் வந்து பார்த்த போது, பீரோவுக்குள் இருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த தலைமைக் காவலர் அபர்ணா, உடனடியாக தனது வீட்டுக்கு விரைந்து வந்து சோதனையிட்டார். அப்போது பீரோவுக்குள் இருந்த 40 பவுன் நகை திருடுப் போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைவதும், பின்னர் பையோடு அவர் திரும்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த சிசிடிவி காட்சிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான பெண், காட்பாடி ரயில் நிலையத்தில் சிலருடன் நின்று கொண்டிருப்பதாக இன்று காலை 5.30 மணியளவில், காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் கணவன் - மனைவி என்பதும், இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பவுடர் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை மற்றும் சில வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கீரன் (35) மற்றும் அவரது மனைவி பிகாஸ் (40) என தெரிய வந்தது. பின்னர், அவர்களையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளையும் புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசாரிடம் காட்பாடி போலீசார் ஒப்படைத்தனர். அவர்களின் இரண்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.