அரசுக் கல்லூரி கேண்டீனில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது

அரசுக் கல்லூரி கேண்டீனில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது

நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர் உதவியுடன் நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டீனில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கேண்டீன் நடத்தி வரும் கோட்டூர்புரம் கருணாநிதி தெருவில் வசித்து வரும் முத்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன், சமையல் மாஸ்டர் குணசேகரன் உள்ளிட்டோர் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கல்லூரி காவலாளிகளிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

பின்னர், காவலாளியின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண், சமூக நல அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமூக நலத் துறை அதிகாரிகள் சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில், கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன், கார்த்திகேயன் ஆகியோர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட முத்து செல்வம் திமுகவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேண்டீனில் பணி புரிந்த பாக்யராஜ் என்பவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னையில் மிகப் பிரபலமான நந்தனம் அரசு கல்லூரியில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்வத்தை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.