தமிழ்நாட்டில் வரி செலுத்த பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர் - வரித்துறை கூடுதல் ஆணையர் தகவல்

தமிழ்நாட்டில் வரி செலுத்த பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர் - வரித்துறை கூடுதல் ஆணையர் தகவல்

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பொதுமக்கள் வரி செலுத்த ஆர்வமாக இருப்பதாக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகமான பிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா, நேற்று (நவ.15) நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பொன்னையா நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 31 பேருக்கு முனைவர் பட்டம், 215 பேருக்கு முதுகலை பட்டம், 888 பேருக்கு இளங்கலை பட்டம் என மொத்தம் 1134 பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளித்து பேசிய தேவேந்திர பூபதி, மாணவர்களுடைய கல்வி அறிவாக மாற வேண்டும் என்றும், அந்த அறிவு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்றும் பேசி ஊக்குவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமூக ஊடகங்கள் ஒரு தொற்று நோய் போன்று தோன்றினாலும், அதன் வழியாக கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன வேலைக்கு செல்லலாம்? எங்கு படிக்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு பிறரை சார்ந்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது அனைத்தையுமே உள்ளங்கையில் இருக்கிற செல்போன் மூலமே கற்றுக்கொள்ள முடிகிறது. செல்போன்கள் ஒரு சமுதாயத்தை, மக்களை முன்னேற்றக்கூடிய கருவியாக பயன்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வேளாண்மை துறையை தேர்ந்தெடுத்து படித்த நிறையப் பேர் குடிமைப் பணியில் தேர்வாகி அரசின் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். இன்றைக்கு சட்டத்தின் தேவை இல்லாத துறையே இல்லை என்று சொல்லலாம். சட்டப் படிப்பில் அதிக தேவை இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படிப்பின் மீது மாணவர்களுக்கு மோகம் ஏற்படுவதுண்டு. நிறைய மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களுடைய பெற்றோர்களே தேர்ந்தெடுக்கின்றனர்.

அதன் காரணமாகவே நிறைய மாணவர்கள் தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் கலை மற்றும் கலாச்சாரத்தையும் எல்லோரும் படிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்கு கலையும் வரலாறும் மிக மிக முக்கியம்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் குடிமை பணி தேர்வில் கடந்த 4 ஆண்டுகளாக சராசரியாக 60, 70 பேர் மட்டுமே மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்தனர். ஆனால் 2025ஆம் ஆண்டில் 155 பேர் தேர்வாகி நேர்முக தேர்வுக்கு செல்கின்றனர். அதேபோல், இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் வரி செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்” என்றார்.