ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்
பாஜக ஆளும் உத்தரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியால், ஸ்மார்ட் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் மாநிலத்தின் முக்கியப் புனிதத் தலங்களான வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில், கோரக்பூரின் கோரக்நாத் கோயில் ஆகியவற்றுக்கு முதல்கட்டமாக ஏ.ஐ. அடிப்படையில் பாதுகாப்புக்கான கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறும்போது, “நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில் கோயில் நிர்வாகத்தை நவீனமயமாக்குவதிலும் எங்கள் அரசு இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏ.ஐ. கேமராக்கள் மூலம் கோயில்களின் அன்றாட நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.
பக்தர்களின் கூட்ட நெரிசலை ஆய்வு செய்து பாதுகாப்பு அளிக்கவும் கோயில்களை தூய்மையாக பராமரித்து பணியாளர்களை திறம்பட நிர்வகிக்கவும் இது உதவுகிறது. நாட்டில் ஸ்மார்ட் சுற்றுலாவுக்கு உ.பி.யை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.
தற்போது சர்வதேச நாடுகளால் அனைத்து வகை பயன்பாட்டுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனை கோயில்களில் முதன்முறையாக உ.பி. அரசு பயன்படுத்துகிறது. இதன் மூலம் பக்தர்கள் அதிக பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீவிரவாதம் உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்தும் கோயில்களுக்கு முழு பாதுகாப்பும் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.