தமிழகத்திற்கு மேலும் ஒரு கிராண்ட் மாஸ்டர்- ASEAN சாம்பியன் பட்டத்தை வென்ற ராகுல் அசத்தல்
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், தமிழக வீரர் வி.எஸ். ராகுல், இந்தியாவின் 91-வது மற்றும் தமிழ்நாட்டின் 36-வது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரானது பிலிப்பைன்ஸில் உள்ள ஓசாமிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இதில் ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 21வயதேயான செஸ் வீரர் வி.எஸ். ராகுல் பங்கேற்றிருந்தார். இத்தொடரில், ஒரு சுற்று எஞ்சியுள்ள நிலையில், ராகுல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியதுடன், இந்தியாவின் 91-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தையும் பெற்று சாதித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு 2400 புள்ளிகளை கைப்பற்றியதன் மூலம் ராகுல், சர்வதேச மாஸ்டர் அந்தஸ்த்தை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற இரண்டாவது தமிழக வீரர் ராகுல் ஆவார். முன்னதாக கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் இளம்பர்த்தி இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தை பெற்றிருந்தார்.
அவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் 2025 செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான புள்ளிகளைப் பெற்றதன் மூலம், தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்ததை பெற்றிருந்தார். இதனையடுத்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தை வென்ற வி.எஸ்.ராகுல் மற்றும் இளம்பர்த்தி ஆகியோருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.