WPL 2026: தொடர் வெற்றிகள்..பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி ஆர்சிபி அசத்தல்

WPL 2026: தொடர் வெற்றிகள்..பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி ஆர்சிபி அசத்தல்

குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹேரிஸ், ஜார்ஜியா வோல் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கௌதமி நாயக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவு செய்தார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரான்கனைகள் பெத் மூனி, சோஃபி டிவைன், அனுஷ்கா சர்மா, கனிகா அவுஜா, காஷ்வி கௌதம், ஜார்ஜியா வெர்ஹாம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதற்கிடையில் களமிறங்கிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார். இறுதியில் ஆஷ்லே கார்ட்னரும் 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆர்சிபி தரப்பில் சயாலி சத்கரே 3 விக்கெட்டுகளையும், நதின் டி கிளார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 5 ஆவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.