இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியினை கரூர் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் தொடங்கியது.

கரூர் கோடங்கிபட்டியில் தீபாவளி பரிசு வழங்கும் பணியினை இன்று (அக்.18ம் தேதி) முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று தீபாவளி பரிசுகளை வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக கோடங்கிப்பட்டியில் ஸ்ரீபட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பரிசுப் பொருட்களையும் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படங்களுடன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ, திமுக கரூர் மாவட்ட செயலாளர் என அவர் படத்துடன் அச்சிடப்பட்ட பையில் சுமார் 2 அடி உயரமுள்ள மூடியுடன் கூடிய சில் வர் அண்டா வழங்கப்பட்டது. சில்வர் மூடியில் செந்தில்பாலாஜி பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அண்டாவினுள் இனிப்பு மற்றும் கார பாக்கெட்டு கள் இருந்தன.

துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, சக்திவேல், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் 250 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்க அரசு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் வழங்கப்படும். இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐடி பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் விடுப்பட்ட பகுதிகளில் ரூ.460 புதைசாக்கடை அமைக்கும் பணி, ரூ.260 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொழில்துறையினர் சொல்லக்கூடிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தால் திரு மாநிலையூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிமுவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. விபத்தில பதவிக்கு வந்தவர்கள் அந்த நிதியை தங்கள் நிறுவனம் பெயரில் ஒப்பந்தம் பெற்று சாலை அமைத்து விட்டனர். மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டன. விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்து நிலையம் நகரின் மிக அருகே உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது. மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 300 ஏக்கருக்கு மேல வாங்கிப்போட்டு பேருந்து நிலையம் அமைப்பதாகக்கூறி நிதி ஒதுக்கவில்லை. மாநகராட்சியிடம் நிதி கேட்டனர். திருமாநிலையூரில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று சுயநலமின்றி பேருந்து நிலையம் அமைத்துள்ளோம்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து புதிய பேருந்து நிலையம் அமைத்ததை பாராட்டினர். தனியார் பேருந்துகளுக்கு அலு வலகம் கேட்டுள்ளனர். இதுகுறித்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது என்றார்.