இளம் கிரிக்கெட் வீரரைப் பாராட்டிய சிரஞ்சீவி

ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை பாராட்டியிருக்கிறார் சிரஞ்சீவி.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆசிய கிரிக்கெட் கோப்பையின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் ஆட்டமே இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இதற்கு திலக் வர்மாவை கவுரவிக்கும் விதமாக சிரஞ்சீவி சால்வை போர்த்தி, அவரது புகைப்படம் ஒன்றையும் நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் திலக் வர்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, அஞ்சாத மனநிலை உள்ளிட்டவற்றை மேற்கோளிட்டுப் பாராட்டினார் சிரஞ்சீவி.
இந்தப் பாராட்டின்போது, ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் அனில் ரவிப்புடி, நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர்கள் உடன் இருந்தனர்.