'கருணாநிதி தான் அரசியலில் எனக்கு முதல் ஆசிரியர்... ஆனால்' - குஷ்பு பேட்டி

'கருணாநிதி தான் அரசியலில் எனக்கு முதல் ஆசிரியர்... ஆனால்' - குஷ்பு பேட்டி

கருணாநிதி தான் அரசியலில் எனக்கு முதல் ஆசிரியர் என்று பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், '' தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சி வந்ததில் இருந்து சுத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு எப்போது தர போகிறீர்கள்? என்ற ஒரே கேள்வியை தான் முதலமைச்சரிடம் கேட்கிறோம். பெண்களுக்கான ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் பெண்கள் மீதான கொடுமைகள் 65 சதவீதம் அதிகமாகி விட்டது.'' என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், '' கோவை, பொள்ளாச்சி, அண்ணா பல்கலைக்கழக சம்பவங்களுக்கு முக்கியமான காரணம் போதை பொருள், டாஸ்மாக் ஆகும். போதைக்கு அடிமையானவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக்கில் லாபம் வருவதால், இரவு 10 மணிக்கு மேல் கூட பில் இல்லாமல் மது விற்கப்படுகிரது. தேர்தல் வரும் நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று வாய் கூசாமல் திமுகவினர் பேசுகிறார்கள்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா? இந்தியா முழுவதும் ''ஒரே நாடு ஒரே ஓட்டு'' என்று தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள்? நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து உள்ளது. ஆனால் இப்போது நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பீகாரில் இருந்து வந்தால் கிண்டல் செய்கிறீர்கள். உங்களுக்கு சாதகமாக இருந்தால் வரவேற்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வந்தீர்களா?'' என்றார்.

தொடர்ந்து, தவெக-வினரை 'தற்குறி' என்று சிலர் விமர்சிப்பதை குறித்த கேள்விக்கு, '' அதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். நான் தவெக தொடர்பாளர் கிடையாது.'' என்றார்.

மேலும், '' கருணாநிதி தான் அரசியலில் எனக்கு முதல் ஆசிரியர். யாரையும் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று எனக்கு அவர் நாகரிகம் சொல்லி கொடுத்து உள்ளார். அதனால் தான் திமுகவில் இருப்பவர்கள் அநாகரிகமாக பேசும் போது கருணாநிதி உருவாக்கிய கட்சியா இது? என்ற எண்ணம் வருகிறது என்ற குஷ்பு, '' கடந்த தேர்தலில் இருந்தவர்கள் இப்போது இல்லாமல் போய் இருப்பார்கள். சிலர் 18 வயது பூர்த்தி அடைந்து இருப்பார்கள். SIR -யை இப்போது கொண்டு வராவிட்டால், எப்போதும் கொண்டு வர முடியாது. இதற்காக தான் எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டது.'' என இவ்வாறு அவர் கூறினார்.