எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க சொந்த கட்சியினரே போதும் - உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க சொந்த கட்சியினரே போதும் - உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என்று அதிமுகவிற்குள் பலர் வேலை பார்த்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலை திறக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி தரணிவேந்தன் ஆகியோர் தலைமையில் ஆரணியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதி திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுகவை யார் கைப்பற்றுவது என்பது அவர்களுக்குள்ளே போட்டியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என்று அதிமுக அணிக்குள்ளேயே வேலை பார்த்து வருகின்றனர். எடப்பாடி அதிமுகவிற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் காலடியில் யார் முதலில் விழுவது என்று அதிமுக அணிக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. ஆனால், பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் தமிழக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். வெறுப்பு அரசியல் மட்டுமே செய்யும் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்து 8 மாதமாகிய நிலையில், அந்த கூட்டணி நம்பி இதுவரை எந்த கட்சியும் போகவில்லை. அதிமுகவில் இருக்கிறவர்கள் ஒருவருக்கொருவர் விலகி ஓடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி கடந்த 8 மாதத்திற்கு முன்பு பிரச்சாரத்திற்கு செல்வதாக கூறி பேருந்தை எடுத்து கொண்டு கிளம்பினார். ஒவ்வொரு தொகுதியாக சென்று பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தேனி பக்கம் சென்றால் ஓ.பன்னீர்செல்வம் திட்டுவார், கோபிசெட்டிபாளையம் சென்றால் செங்கோட்டையன் திட்டுவார், டெல்டா மாவட்டம் சென்றால் டிடிவி தினகரன் திட்டுவார் என்றே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஒரு விஷயத்தில் மட்டும்தான் அதிமுகவிற்குள் ஒற்றுமை உள்ளனர். அமித்ஷாவை அதிகமாக பாராட்டி பேசுவது அதிமுகவில் உள்ள ஒற்றுமை. சொந்த கட்சியினரை திட்டி, அமித்ஷாவின் காலை பிடித்துக்கொண்டு புகழ்கின்றனர்” என்றார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.