''திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்'' - கனிமொழி வெளியிட்ட முக்கிய தகவல்
திமுக கூட்டணிக்கு நிச்சயமாக புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
நாடாளுமன்ற திமுக குழு தலைவரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''நிச்சயமாக இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறதோ, இல்லையோ தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் பெயர் இடம் பெறும். இதனை மட்டும் நாம் பலமுறை கேட்கலாம். வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் எதையும் நாம் எதிர்பார்க்கலாம்.
தேமுதிகவுடன் கூட்டணி சம்பந்தமாக நான் எதுவும் பேசவில்லை. கூட்டணி உறுதியாக இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார். மக்களை சந்தித்து கோரிக்கைகள், கருத்துக்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எது ஏற்றுக்கொள்ள முடியுமோ, நிறைவேற்ற முடியுமோ அதையெல்லாம் அறிக்கையாக தயார் செய்வோம்.
ராகுல் காந்தியை நான் சந்திக்கும் போது முகத்தை மூடிக் கொண்டு போகவில்லை. நேரடியாக தான் சென்றேன். யார் யாருக்கு அடிமை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்" என்று கனிமொழி கூறினார்.
முன்னதாக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் குழு தலைவரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இதில், குழு உறுப்பினர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர். அப்போது வந்த மாற்றுத்திறனாளிகளிடம் சென்று கனிமொழி மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதன் பிறகு கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், '' திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக தந்து வருகிறார்கள். ஒரு வாக்குறுதியை கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அடுத்து அமையப்போவது திமுக ஆட்சி தான் என்ற நம்பிக்கையோடு மக்கள் மனுக்களை தருகிறார்கள்.
நிச்சயமாக புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு எந்த கட்சி? எப்போது வரும்? என்ற முடிவை முதலமைச்சர் அறிவிப்பார். எத்தனை கருத்துக்கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் என்பது திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமூகமாகவே உள்ளது'' என்று கனிமொழி எம்.பி கூறினார்.