விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் வெளியீடு
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ’ஒரு பேரே வரலாறு’ இன்று வெளியானது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லக் கூடிய ’ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதற்கு முன்னதாக வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் ஜனநாயகன் திரைப்படம் கோலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ’தளபதி கச்சேரி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கக் கூடிய சூழலில், இரண்டாவது பாடலுக்கு ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இன்று மாலை ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் ’ஒரு பேரே வரலாறு’ என்ற பாடல் வெளியானது. இப்பாடல் ’ஒரு பேரே வரலாறு அழித்தாலும் அழியாது, அவன் தானே ஜனநாயகன்’ என்கிற வரிகளுடன் துவங்குகிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அரசியல் மாநாட்டில் திருப்பரங்குன்றத்தில் விஜய், மதுரையில் விஜய், மதுரை மேற்கு விஜய் என்று ஒரு பெயருக்கு மட்டும் வாக்களியுங்கள் என விஜய் பேசியுள்ளார். அந்த பேச்சை மையமாக கொண்டு ஒரு பேரே வரலாறு, அழித்தாலும் அழியாது என்று விஜய்யின் அரசியல் துதியை பாடும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளது.
அதற்கு அடுத்த வரிகளில் ’நம் மக்கள் நினைக்காமல், ஒரு மாற்றம் நடக்காது’ என்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து எழுதப்பட்டுள்ளது. மேலும் பாடல் வீடியோவில் அரசியல் மேடைகளில் கொடுக்கப்படுகின்ற வீரவாள்கள் மற்றும் மக்களாக ஒன்று சேர்ந்து விஜய்க்கு நாற்காலியை பரிசளிப்பது, அதில் அவர் அமர்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பாடல் முழுவதும் வெறும் அரசியல் மட்டும் பேசி நடந்து செல்வது போன்ற காட்சிகள் மட்டுமே உள்ளது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், விஜய்யின் துள்ளலான நடன காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் நடன இயக்குநர்களாக சேகர் விஜே, சுதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
ஜனநாயகன் தன்னுடைய கடைசி திரைப்படம் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், தனது அரசியல் பயணத்தை முன்னிறுத்தியே தன்னுடைய கடைசி திரைப்படத்தில் பாடல்கள் இருக்க வேண்டும் என தனி கவனம் செலுத்தி இருப்பது, இந்தப் பாடல் வரிகள் மூலம் நிரூபணமாகிறது.