ஒரே மொழி, ஒரே நாமம் நடக்கவே நடக்காது - கமல் திட்டவட்டம்
ஒரே மொழி, ஒரே ஆடை என்பது போல் ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இந்திய உடற்கல்வி அறக்கட்டளை சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “கமல்ஹாசனை நடிகனாக மட்டும் சுருக்கிவிட முடியாது, சமுதாயம் சார்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக பலரை படிக்க வைத்து வருகிறார். கமல் ஹாசன் உழைப்பை நாம் பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டிகளுக்கு செல்பவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் உதவியும், ஊக்கமும் அளித்து வருகிறது” என்றார்.
அமைச்சரை தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், "விளையாட்டு என்பது தேச ஆரோக்கியம், வலிமை, மன உறுதியின் அடையாளம். விளையாட்டு தியாகத்தின் அடையாளமாகவும் இருக்கும். விளையாட்டு வீரரின் தியாகம் புரிந்தால் ஜனநாயகம் புரிந்துவிடும்.
விளையாட்டு மட்டுமல்ல. ஒரே மொழி, ஒரே ஆடை, ஒரே உணவு என எதிலும் ஒன்றே ஒன்று என்பது போல் இருக்க முடியாது. ஒரே பொட்டு, ஒரே நாமம் என்பதெல்லாம் நடக்கவே நடக்காது.
வாழ்க்கையில் ஒரு பகுதி கல்வி, அதேபோல ஆரோக்கியமும் தான். அதற்கு முக்கியம் விளையாட்டு தான். எனக்கு பெரும் ஆசான்கள் இருந்துள்ளார்கள். யூ.கே.ஜியில் எனக்கு தமிழ் கற்றுத் தந்தவர்கள் கலைஞர், பாரதிதாசன், சிவாஜி கணேசன் தான்," என்றார்.
மேலும் பேசிய அவர், "உலகை மாற்றும் வல்லமை விளையாட்டிற்கு உண்டு, சினிமா திரையரங்குகளில் தான் முதலில் சாதி ஒழிந்தது என்று நம்புகிறேன். அது வீதிக்கும் வர வேண்டும், என் காலத்திலேயே அது நடக்க வேண்டும் என்பதும் என் விருப்பம்.
மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், பொறுமையாக இருங்கள் என கூறி வந்தேன். தற்போது அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிழைப்புக்காக கவி என்று இல்லாமல், நீங்களும், நாடும் முன்னேற வேண்டும் என்று படித்தால் இந்தியா வல்லரசு ஆகும். பெரும்பான்மை என்பது ஜனநாயகம் அல்ல; எல்லோரையும் பாதுகாப்பது தான் ஜனநாயகம். கல்வி, விளையாட்டு, அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து மிக விரைவில் ஒலிம்பிக் வீரர்கள் வரப் போகிறார்கள். படிப்பத்தோடு மட்டுமல்லாமல் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். உலக மேடைகளில் அனைத்து துறைகளிலும் வெல்வது தான் வல்லரசின் அடையாளம்; அதை நோக்கி நாம் நகர வேண்டும்” என்று கமல் ஹாசன் கூறினார்.