டிச.17ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்: பாமக தலைவர் அன்புமணி!
வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டிசம்பர் 17ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ’தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பேரில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று பரப்புரை மேற்கொண்டார். நேற்றுடன் அவை முடிவடைந்த நிலையில் அரியலூரில் நிறைவு கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியபோது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம், நீர் மேலாண்மை என்றால் என்ன என தெரியுமா? அரியலூரில் சோழர் கால பாசன திட்டத்தை அமல்படுத்துங்கள் என பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. திமுக ஆட்சி நமது உரிமைகளை பறிக்கும் ஆட்சி. முதலில் கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார். பின், காவேரி உரிமையை பறித்துக் கொடுத்தார். இனியும் திமுக ஆட்சி செய்ய கூடாது. இந்த முறை ஆட்சியை என்னிடம் கொடுங்கள். தமிழகத்தின் தலையெழுத்தை என்னால் மாற்ற முடியும்" என்றார்.
மேலும் பேசிய அவர், “வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்காமல் திமுக மிகப் பெரிய துரோகம் செய்து வருகிறது. இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து டிசம்பர் 17ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் நாம் எடுக்கப்போகும் மிகப் பெரிய அரசியல் செயல்பாடு. ஆனால், இப்போது காடுவெட்டி குரு (பாமக முன்னணித் தலைவர், வன்னியர் சங்கம் மாநில தலைவர், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), ஐயா ராமதாஸ் என யாரும் நமக்கு உறுதுணையாக இல்லை. காடுவெட்டி குரு தற்போது இருந்திருந்தால் நமது கட்சியில் எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. ஐயாவை சுற்றிச் சுற்றி வந்து அவரது மனதை மாற்றும் திமுகவினரை இந்நேரம் ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்” என்றார்.
இந்த கூட்டத்தில் பாமக மாநில பொதுச் செயலாளர்கள் வடிவேல், ராவணன், தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் செல்வகுமார், சமூக நீதிப் பேரவை தலைவரும் & பாமக வழக்கறிஞருமான பாலு, மாநில இணை பொதுச்செயலாளரும் & வன்னியர் சங்க மாநிலச்செயலாளருமான க.வைத்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.