அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்? வானதி சீனிவாசன் முக்கிய தகவல்
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை கட்சி தலைமையே அறிவிக்கும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணி எப்படி மேற்கொள்ள வேண்டும்? புதிய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், இணைப் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் எச்.ராஜா, பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் விஜயதாரணி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. குறிப்பாக பாஜக அதிமுக கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தலில் அதிகளவில் வாக்குகளை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து பேசினர். மேலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பிரிப்பதால் திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்குமா? என்பது குறித்தும் ஆலோசித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்திற்கு பியூஸ் கோயல் சென்றார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறும்போது, ''பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் மற்றும் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று சென்னை வந்து எங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை சந்தித்து தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடைபெறுகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீடு ஆகிய விஷயங்கள் பற்றி பாஜக மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பியூஸ் கோயல் விரிவாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பாஜகவுக்கு எந்தெந்த தொகுதி? எத்தனை இடங்கள்? என்பதை கட்சி மேலிடமே அறிவிக்கும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் விஜயால் மட்டும் அகற்ற முடியுமா? அதனை அவர் யோசிக்க வேண்டும்'' என்றார்.