மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை... ஜெயக்குமார் வலியுறுத்தல்
மழையின்போது பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை மாநகரம் முழுவதும் அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவ-மாணவிகள் மீண்டும் வீடு திரும்புவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
பல பள்ளிகள் திடீரென அரை நாள் விடுமுறை அளித்துள்ள நிலையில் மாணவர்கள் இரயில் நிலையம்,பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான முறையில் பரிதவித்து நின்று கொண்டிருப்பதை காண முடிகிறது. வாகன வசதிகள் என எதுவுமின்றி பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளி வளாகங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
கனமழை பெய்தும் விடுமுறை அளிக்க தவறியுள்ள மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்று தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பதிவில் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.