தமிழகம் முழுவதும் கனமழைக்கு 4 பேர் பலி!
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதேபோன்று நேற்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய கனமழை இன்று அதிகாலை வரை பெய்தது. அதிகப்படியாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவாகியிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்றிலிருந்து இன்று காலை வரை தொடர் கனமழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த அசோதை(69), இவருடைய மகள் ஜெயா(40) தங்களுடைய குடிசை வீட்டில் உணவருந்தியபடி அமர்ந்து கொண்டிருந்தனர். இவர்களின் வீட்டிற்கு அருகிலேயே அவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்றும் இருக்கிறது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து அசோதையும், ஜெயாவும் அமர்ந்திருந்த குடிசை மீது விழுந்துள்ளது.
ஓட்டு வீடு சிமெண்ட் சுவர் என்பதால் குடிசையும், உள்ளே இருந்த அசோதை மற்றும் ஜெயாவும் இடிபாடுகளில் சிக்கினர். தங்களை காப்பாற்றுமாறு இருவரும் கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த அவர்களை வெளியே கொண்டு வந்தனர். இருந்தும், சம்பவ இடத்திலேயே அசோதை உயிரிழந்த நிலையில், அவரது மகள் ஜெயா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுச்சத்திரம் போலீஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வீடு இடிந்து பச்சையம்மாள் (60) என்ற மூதாட்டி பலியானார். அதேபோல விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கள் பழைய வெள்ளையபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடைய மகள் பவானி (19) நர்சிங் மாணவி. இவர் வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து, கடந்த இரண்டு நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோன்று கனமழையினால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிலை தடுமாறி ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இதில் பயணம் செய்த 30 பேர் காயமடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெய்த கன மழையினால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.