வலுவிழந்த டிட்வா!- சென்னையில் அடுத்த 2 நாட்கள் மழை எப்படி?

வலுவிழந்த டிட்வா!- சென்னையில் அடுத்த 2 நாட்கள் மழை எப்படி?

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருந்தாலும், அது வலுவிழந்த நிலையிலேயே சென்னை கடற்கரையை ஒட்டி நின்றாடும். இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் (ex Ditwah) சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இது மேலும் 2 நாட்கள் சென்னை கடல்பரப்பை ஒட்டியே நிலவும். இதனால் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடலை ஒட்டியே நிலவும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மழை தொடரும். சில நேரங்களில் சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மற்றபடி மிக கனமழைக்கோ, அதி கனமழைக்கோ வாய்ப்பில்லை. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டியே புதன்கிழமை வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், அதுவரை மழை நீடித்தால் சென்னைக்கு தேவையான சராசரி மழையளவை அடுத்த இரண்டு நாட்களில் எட்ட வாய்ப்புள்ளது.

நேற்று எண்ணூரில் 51 மி.மீ மழை பதிவானது. இன்று 49 மி.மீ பதிவாகியுள்ளது. டிட்வா தாக்கம் தொடங்கியதிலிருந்து சென்னையில் 100 மிமீ மழையளவை நெருங்கிய முதல் இடம் எண்ணூர் எனலாம். நாளைக்குள் நிறைய இடங்களில் 100 மிமீ மழையளவு பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.