'ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டே இருப்போம்'... கமல்ஹாசன் ஓபன் டாக்
ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம் என ’தலைவர் 173’ படம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல், நேர்மையாக நடந்ததா என்பதைதான் நாம் பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றி தான். வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்” என்றார்.
வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து கேட்டபோது, “எஸ்ஐஆர் குறித்து அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும், என்னால் முடிந்த வரை நான் செய்கிறேன். நீங்களும் சேர்ந்து அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்” என கூறினார்.
பின்னர், ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்து பேசிய கமல்ஹாசன், "எனது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது குறித்து அவர் கருத்து தெரிவித்துவிட்டார். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் தற்போது செய்துள்ளோம். ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டே இருப்போம்.
புதிய இயக்குநர்களுக்கும் இப்படத்தில் வாய்ப்பு இருக்கிறது. கதை நன்றாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். மேலும், நானும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடிப்பதற்கு மற்றொரு கதையை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார், எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்குநர் சுந்தர்.சி, தான் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.