பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை: கரூர் சம்பவத்திற்கு இரங்கல்

பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை: கரூர் சம்பவத்திற்கு இரங்கல்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மற்றும் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று (அக் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் துயர சம்பவம் உட்பட பல்வேறு பிரச்னைகளை, சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 17ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.

இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இ.கம்யூ., மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மீண்டும் சட்டசபை கூடி, கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், 16ம் தேதி வரை நடக்கும். விவாதத்திற்கு, 17ம் தேதி பதில் அளிக்கப்படும்.