ஐபிஎல் 2026 மினி ஏலம்: அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப்-5 வீரர்கள்
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கேமரூன் க்ரீன் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்காக 1,390 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 369 வீரர்கள் இறுதிக்கட்ட ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டு ஏலம் நடைபெற்றது.
கேமரூன் க்ரீன்
இதனையடுத்து நடைபெற்ற வீரர்கள் மினி ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.25.20 கோடி என்ற தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. முதலில் கேமரூன் க்ரீனை ஏலம் எடுக்க மும்பை, குஜராத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் கேகேஆர் அணி அவரை ஒப்பந்தம் செய்தது.
மதிஷா பதிரானா
அவருக்கு அடுத்தபடியாக இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மதீஷா பதிரானாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்திருந்தார். அவரை ஏலத்தில் எடுக்க, லக்னோ, டெல்லி, கேகேஆர் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் டெல்லி அணி ஏலத்திலிருந்து விலகிய நிலையில், அடுத்ததாக கேகேஆர் அணி களத்திற்கு வந்தது. இதனால் எந்த அணி மதிஷா பதிரானாவை ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்து அசத்தியுள்ளது. இவரைத் தேர்வு செய்ததன் மூலம் கேகேஆர் அணியின் பந்துவீச்சும் வலிமைப்பெற்றுள்ளது.
லியாம் லிவிங்ஸ்டோன்
இந்த வீரர்கள் மினி ஏலத்தில் நான்காவது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளார். ஏலத்தின் முதல் கட்டத்தில் அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாத நிலையில், மீண்டும் ஆக்சிலரேஷன் சுற்றில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.13 கோடிக்கு லியாம் லிவிங்ஸ்டோனை ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
முன்னதாக கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோனின் செயல்பாடுகள் பெரிதளவில் இல்லாத காரணத்தால் அவரை அந்த அணி கழட்டிவிட்டது. இருப்பினும் இந்த ஏலத்தில் அவர் அதிக தொகைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் சுற்றில் அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டாதது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இறுதியில் சன்ரைசர்ஸ் அணி அவரை மிகப்பெரும் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் வீர் - கார்த்திக் சர்மா
இந்த பட்டியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சிஎஸ்கே அணி வாங்கிய இரண்டு அன்கேப்ட் வீரர்கள் தான். ஒருவர் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் பிரசாந்த் வீர், மற்றொருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் கார்த்திக் சர்மா ஆகியோர் தான். ஏனெனில் இவர்கள் இருவரும் தங்களின் ஆரம்ப தொகையான ரூ.30 லட்சத்தில் இந்த ஏலத்தில் பங்கேற்ற நிலையில், ரூ..14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரசாந்த் வீரை (ரூ.30) ஏலம் எடுக்க மும்பை, லக்னோ, ராஜஸ்தான் அணிகள் ஆர்வம் காட்டின. இதில் மும்பை, லக்னோ, ராஜஸ்தான் அணிகள் ஒருகட்டத்திற்கு மேல் ஏலத்தில் இருந்து விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.14.20 கோடிக்கு பிரசாந்த் வீரை ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அன்கேப்ட் வீரராக அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற ஆவேஷ் கானின் சாதனையை முறியடித்தார். முன்னதாக 2022ஆம் ஆண்டு அன்கேப்ட் வீரர்கள் பட்டியலில் அவேஷ் கான் ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பிரசாந்த் வீர் ரூ.14.20 கோடிக்கு ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.
அடுத்ததாக நடைபெற்ற அன்கேப்ட் விக்கெட் கீப்பர்களுக்கான ஏலத்தில் கார்த்திக் சர்மாவை ஏலம் எடுக்க சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஒருகட்டத்தில் ஏலம் 13 கோடிகளைத் தாண்டிய நிலையில் கேகேஆர் அணி ஏலத்தில் இருந்து விலகிய நிலையில், சன்ரைசர்ஸ் அணி ஏலத்திற்கு வந்தது. இறுதியில் கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்து அசத்தியுள்ளது.
இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அன்கேப்ட் வீரர் என்ற பிரசாந்த் வீரின் சாதனையை கார்த்திக் சர்மா சமன் செய்தார். அதுமட்டுமில்லாமல் இருவரும் தங்களுடைய அடிப்படை ஏலத்தொகையைக் காட்டிலும் 4,733 சதவீதம் அதிக விலைக்கு ஏலம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.