'எனக்கு எண்டே கிடையாது' 19-வது சீசனிலும் விளையாடும் எம் எஸ் தோனி - சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

'எனக்கு எண்டே கிடையாது' 19-வது சீசனிலும் விளையாடும் எம் எஸ் தோனி - சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐபிஎல் தொடரின் 19-வது சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்க வைக்கும், யார் எந்த அணியில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

அதே சமயம் எதிர் வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றன. ஏனெனில் தற்சமயம் 44 வயதை எட்டியிருக்கும் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவர் ஐபிஎல் போட்டிகளைத் தாண்டி மற்ற எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதை தவிர்த்துள்ளார்.

இதனால் கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். எப்போதும் போலவே இந்த ஆண்டு எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அல்லது தொடருக்கு முன்னதாக ஓய்வை அறிவிப்பாரா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்ற அறிவிப்பு வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் எதிர் வரும் சீசனில் விளையாடுவார் என்பது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், "அவர் விளையாட வாய்ப்புள்ளது, அதுதான் தற்போதைய நிலை. வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவார்" என்று கூறியுள்ளார்.