2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
2001-ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உள்பட 10 பேரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.
பழைய நாடாளுமன்ற கட்டடமான ‘சம்விதான் சாதன்’-்ல் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடந்தது. குடியரசுத் துணை தலைவரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற கட்டட தாக்குதலின் 24-வது ஆண்டு நிறைவையொட்டி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்களும் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2001 நாடாளுமன்ற தாக்குதல்
2001-ம் ஆண்டு இதே தினத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஆயுதம் ஏந்திய 5 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், 6 டெல்லி காவல் துறையினர், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவர், ஒரு செய்தியாளர் மற்றும் பராமரிப்பாளர் உள்ளிட்ட 10 பேரை சுட்டுக் கொன்றனர்.
எனினும், டெல்லி காவல் துறை மற்றும் தொழிற்பாதுகாப்புப் படையினர் சேர்ந்து பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் நுழைத்து அவர்கள் தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு, 5 பயங்கரவாதிகளும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பு வாசலில் வைத்தே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதன் நினைவாக, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீர மரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.