“வான்வெளியின் பாதுகாவலர்கள்” - இந்திய விமானப்படை தினத்தில் வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

“வான்வெளியின் பாதுகாவலர்கள்” - இந்திய விமானப்படை தினத்தில் வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

93-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வான் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிற இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, வான்வெளியை பாதுகாத்தல் மற்றும் பேரிடர் காலங்களில் உதவுகிற வான்வெளி வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விமானப்படை தினத்தன்று எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பை இந்திய விமானப்படை எப்போதும் கொடுத்து வருகிறது. நமது விமானப்படை வீரர்கள் நமது வான்வெளியை பாதுகாப்பதுடன், பேரிடர்களின்போது தங்களது அயராத உழைப்பை கொடுத்து நாட்டிற்கு சேவை செய்கிறார்கள்.

ஒவ்வொரு சவாலையும் வலிமையுடனும் தயார் நிலையில் நின்றும் எதிர் கொண்டு நாட்டையே நமது விமானப்படை பெருமைப்படுத்தி வருகிறது. இந்திய விமானப் படையின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திரெளபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

விமானப்படை வீரர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் இந்திய வான்வெளியை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "நமது துணிச்சலான விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விமானப்படை தினத்தன்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணிச்சல், ஒழுக்கம் மற்றும் நுட்பங்களை கையாளும் திறன் ஆகியவற்றிற்கு இந்திய விமானப்படை உதாரணமாக விளங்குகிறது. மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் நமது வான் எல்லையை பாதுகாப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக, இயற்கை பேரிடர்களின்போது அவர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுடைய துணிவு மனப்பான்மை ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், "வானத்தின் பாதுகாவலர்களுக்கு வாழ்த்துகள்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், "தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த விமானப்படை தியாகிகளுக்கு மனமார்ந்த வணக்கத்தை செலுத்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.