இதுவே என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் - ஜம்மு அணி தொடக்க வீரர் கம்ரான் இக்பால்
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடியதாக நினைக்கிறேன் என்று ஜம்மு-காஷ்மீர் அணியின் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பு சீசன் கடந்த அக்டோபர் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாங்காம் சுற்று ஆட்டங்கள் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கின. இதில் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி மற்றும் ஜம்மூ-காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜம்மு-காஷ்மீர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அந்தவகையில் இப்போட்டியில் டெல்லி அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய கம்ரான் இக்பால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தியதுடன், 20 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி 133 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஜம்மு அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்தது. ஏனெனில் ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை படைத்தது.
இந்த நிலையில் இப்போட்டியில் சதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கம்ரான் இக்பால் கூறுகையில், "என்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடியதாக நினைக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே என்னுடைய சிறந்த இன்னிங்ஸ். இந்த இன்னிங்ஸில் நாண் விளையாடுவதற்கு முன்னதாக எனது பயிற்சியாளர், என்னுடைய ஆட்டத்தை சுதந்திரமாக விளையாடும் படி அறிவுறுத்தினார்.
அதேசமயம் நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே எட்ட வேண்டும் என்பதால், நாங்கள் ஒருபோதும் அழுத்தத்தில் இருக்கக்கூடாது என்றும், ஒரு பக்கத்திலிருந்து ரன்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றும் நான் விரும்பினேன். அதனால் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்க்க தொடங்கினேன். இறுதியில் அது எங்களுடைய வெற்றிக்கு உதவியது. முதலில் நான் மைதானம் பவுலர்களுக்கு சதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஆட்டம் செல்ல செல்ல அது பேட்டர்களுக்கு நிறைய பங்களிப்பை வழங்கியது" என்று கூறினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிகள் 43 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், அதில் டெல்லி அணி 37 முறையும், 4 முறை போட்டி டிராவிலும் முடிவடைந்திருந்தது. அதேசமயம், கடந்த ரஞ்சி கோப்பை தொடரின் போது வலிமை வாய்ந்த மும்பை அணிக்கு எதிராகவும் ஜம்மு-காஷ்மீர் அணி தங்களுடைய முதல் ரஞ்சி வெற்றியைப் பதிவு செய்திருந்தது நினைவுகூறத்தக்கது.